மன்னாரில் மணல் அகழ்வில் ஈடுபட்டோருக்கு மக்கள் எதிர்ப்பு
தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல் அகழ்வு பணியில் ஈடுபட வந்த குழுவினருக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
குறித்த குழுவினர் நேற்று வியாழக்கிழமை(22) மாலை மணல் அகழ்வு பணியில் ஈடுபட முற்பட்டுள்ளனர்.
இதையடுத்து தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை மற்றும் தலைமன்னார் ஸ்டேஷன் பகுதி மக்கள் ஒன்றிணைந்து குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மணல் அகழ்வு
இந்நிலையில், தகவலறிந்த தலைமன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

எவ்வித அனுமதியும் இன்றி மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக சகல ஆயதங்களுடனும் குறித்த குழுவினர் வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு மணல் பரிசோதனை குழுவினர் வருகைத்தந்துள்ளனர்.
மக்கள் எதிர்ப்பு
வருகை தந்த மணல் பரிசோதனை குழுவினர், தாங்கள் ஒரு ஒப்பந்த நிறுவனம் என்றும் தமது ஒப்பந்தத்தினை காண்பித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மக்களின்  தொடர் எதிர்ப்பினால் குறித்த குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தலைமன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 




 
                                        
                                                                                                                         
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        