குடிநீர் இன்றி அல்லலுறும் மக்கள்! உடனடியாக தீர்வு வழங்குமாறும் கோரிக்கை.
குடிநீர் இன்றி அல்லலுறும் ஆனந்தபுரம் மக்கள் உடனடியாக தீர்வு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் கிராம மக்கள் குடிநீரின்றி பன்னெடுங்கலமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
குறித்த கிராமத்தில் நிலத்தடி நீர் உவர் நீராக காணப்படுகின்ற காரணத்தினால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு இடர்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மிக நீண்ட காலமாக இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வந்த மக்களுக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் முதலாவது குடிநீர் திட்டமாக ஆனந்தபுரம் தெரிவு செய்யப்பட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் கூட்டங்கள் 2017 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்டன.
இதன்பின்னர் குறித்த பகுதிகளுக்கான நீர் இணைப்பு வேலைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்து ஒரு நாள் நீர் வழங்கப்பட்டு நீர் குழாய்கள் சுத்திகரிக்கப்பட்ட நிலைமையின் பின்னரும் இன்றுவரை அந்த குழாய் நீர் ஊடாக குடிநீர் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று குறித்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்ற காலத்திலே அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தாலும் இந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் இந்த குடிநீர் திட்டத்தை ஆரம்பித்ததன் பின்னணியில் அவர்கள் தற்போது குடிநீரை நிறுத்தியுள்ளனர்.
இதனால் எந்த வகையிலுமே குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் ஆனந்தபுரம் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் தமக்கு நீர் வழங்குவதற்கான அனைத்து வேலைகளும் முடிந்தும் இன்று வரை குடிநீர் கிடைக்கவில்லை எனவும் இதனால் பல்வேறு இன்னல்களை முகங்கொடுத்து வருவதாகவும் தமக்கு நீர் இணைப்புகள் வழங்கப்பட்டும் பயனில்லை எனவும் மிக விரைவாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எந்த ஒரு தேவைக்கும் நல்ல குடிநீரை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்ற மக்களுக்கு மிக விரைவில் குடிநீரை வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் இன்னும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க நேரிடும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த பகுதிக்கான நீர் இணைப்பு வேலைகள் இடம்பெற்று உள்ளதாகவும் நீர் குழாய்கள் சுத்தம் செய்கின்ற வேலைகள் இடம்பெற்று வருவதாகவும் இந்த பகுதிக்கு நீரை எடுத்து வருகின்ற ஆரம்பப் பகுதியில் இருக்கின்ற மந்துவில் பிரதேசத்தில் தற்போது இணைப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் வருகிற மாதம் அளவில் இவர்களுக்கான குடிநீர் வழங்கக் கூடிய நிலைமை இருக்கும் என தெரிவித்தார்.
எது எவ்வாறு இருப்பினும் தொடர்ச்சியாக நீர் குடிநீர் தட்டுப்பாடு எதிர்கொள்ளும் இந்த மக்களினுடைய குடிநீர் தேவை மிக விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது .