முன்னாள் சபாநாயகரின் ஆலோசனையில் மக்கள் சபை..! ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்
அடுத்தவாரம் முதல் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆலோசனைக்கமைய மக்கள் சபையை ஸ்தாபிக்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச தொடர்பாடல் பொறிமுறை தொடர்பில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் ஆகியோரின் ஊடக செயலாளர்களை தெளிவுப்படுத்தும் செயலமர்வு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கருத்துரைக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " அரசாங்கம் என்ன செய்கின்றது என்பது தொடர்பில் அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டும். தவறான எண்ணங்கள் இருப்பின் திருத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது கடினமான காலத்திலே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். நாடு வீழ்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டிருக்குமாயின் அதிலிருந்து மீட்சிப்பெறுவது கடினம்.
நாடொன்று ஸ்திரத்தன்மையுடன் பயணிக்க வேண்டும். சரியான தகவல்களை வழங்குவதன் ஊடாகவே ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும்.
இன்று இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களை விட அதிளவிலான பிரச்சினை சமூக ஊடங்களாலேயே ஏற்படுகின்றது. இது உலகளாவிய ரீதியாக உள்ள பிரச்சினை.
ஊடகங்கள் உரிய வகையில் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். பொறுப்புக்களை உரிய வகையில் நிறைவேற்றாவிடின் முழு நாட்டிற்கும் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் ", எனக் குறிப்பிட்டார்.
