உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் பேரறிவாளன்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மும்பை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்க உத்தரவிட மனுதாக்கல் செய்துள்ளார்.
சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டமை தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்குமாறு பேரறிவாளன் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்குத்தண்டனையும், மற்ற நால்வருக்கும் ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கூறி மூன்று பேரும் ஜனாதிபதிக்கு மனு அனுப்பியிருந்தனர். இம்மனு குறித்து ஜனாதிபதி முடிவு எடுக்க காலதாமதமானதாக கூறி உச்ச நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருந்ததுடன், அண்மையில் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தமை குறிப்பிடத்தக்கது.