அர்ச்சுனா எம்.பிக்கு எதிராகக் கிளம்பிய சொந்த ஊர் மக்கள்...! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு அவர்கள் தமது கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், “பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் காணியானது பல வருடங்களாகத் துப்பரவு செய்யப்படாமல் பற்றைக்காடாக உள்ளது.
விஷ ஜந்துக்கள்
அங்கு ஒரு பாழடைந்த கிணறும் உள்ளது, அந்தப் பற்றைக்காணிக்குள் விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் வேறு விஷ ஜந்துக்கள் என்பன காணப்படுகின்றன.
குறித்த காணியில் உள்ள பாம்புகள் வெளியேறி வீடுகள் மற்றும் வீதிகள் அருகில் உள்ள கடைகளுக்குள் வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தின் மத்தியில் இருக்கின்றனர்.

வீதியில் சிறியவர்களோ அல்லது பெரியவர்களோ யாரும் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது, அருகில் உள்ள ஆலயத்திற்கும், கடைக்கும் செல்வதற்கு அச்சமாக இருக்கிறது.
மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர், தான் பல நல்ல விடயங்களைச் செய்வதாக வாயால் மட்டுமே தெரிவித்துக்கொண்டு இருப்பவர், தனது காணி குறித்து அக்கறை இல்லாமல் இருப்பது விசனத்தை ஏற்படுத்துகிறது.
நல்ல நோக்கம்
காணியைச் சுத்தம் செய்யாவிட்டால் பிரதேச சபையினால் அந்தக் காணியானது சுத்தம் செய்யப்பட்டுப் பிரதேச சபைக்கு உரியதாக மாற்ற வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம்.
பெரியவிளானில் காணிகள், வீடுகள் இன்றிப் பல குடும்பங்கள் வாழ்கின்றன.

அவர் ஒரு நல்ல நோக்கம் உள்ளவர் என்றால் தன்னால் பராமரிக்க முடியாத காணிகளை அந்த மக்களுக்கு வழங்கலாமே ? அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.
ஆனால் அவர் பிறந்த ஊரான பெரியவிளான் பகுதியில் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்கள் இருக்கின்றனர்.
புனரமைக்கப்படாத வீதிகள்
புனரமைக்கப்படாத வீதிகள் இருக்கின்றன. மற்றும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் பல உள்ளன, அவற்றை எல்லாம் அவரால் செய்ய முடியாது, ஆனால் வாயால் வெற்றுப் பேச்சு பேச முடியும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பரீட்சை வைத்து அதில் சித்தி பெறுபவர்களையே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவிக்கின்றார்.

அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், அத்தோடு அதுபோல நாங்களும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்.
அதாவது, இனிமேல் நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனநிலை குறித்துப் பரீட்சித்து அவர்கள் மனநலம் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றார்களா எனப் பரிசோதித்த பின்னரே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
இதை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |