கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஊசி மருந்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு : ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17 ஆவது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் அங்கு அவருக்கு Cefuroxime என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, ஊசி மருந்து போடப்பட்ட பின்னர் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுவதுடன் உயிரிழந்தவர் 31 வயதுடைய ஆண் ஒருவரென தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய வைத்தியசாலை
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் மருத்துவர் குமார விக்கிரமசிங்கவிடம் ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

அதற்கு அவர் பதிலளிக்கையில், நபரின் மரணம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தி
அத்தோடு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை செலுத்தியதால் மரணம் நிகழ்ந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பதை விசாரணைகள் ஊடாக கண்டறிய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எவ்வாறாயினும் உயிரிழந்த நோயாளிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தின் வகையானது ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக குமார விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்