தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு இடம் கிடையாது - ஆளும்தரப்பு ஆணித்தரம்
தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அரசாங்கத்திற்குள் செயற்படுத்த எவ்விதமான இடமும் இல்லை என்கிறார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமீத பண்டார தென்னகோன்(Premitha Bandara Tennakoon)
கலேவல பிரதேச செயலாளர் அலுவலகத்துடன் சமுர்த்தி தலைமையகமும் இணைந்து தம்புள்ளை - குருணாகல் வீதியின் இப்பங்கட்டுவ பிரதேசத்தில் விஷமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தின் திறப்பு விழா மற்றும் கமத்தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
''நாட்டின் பொருளாதார நிலைமையை வீழ்ச்சிக்கு கொண்டு செல்ல வேறு அணியின் சூழ்ச்சிகள் அரசாங்கத்திற்குள் முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிளவுகள் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தி, அவர்கள் அரசாங்கத்திற்குள் இருக்கும் கிளர்ச்சி அணி என்று கூறினாலும் அவர்கள் கிளர்ச்சி அணியினர் அல்ல நாடககாரர்கள்.
இந்த நாடககாரர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நாடகம் ஒன்றை அரங்கேற்றுகின்றனர். அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு இப்படியான நாடகங்களை அரங்கேற்றம் செய்ய இடமளிக்க முடியாது.
அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு கிளர்ச்சி செய்யும் இந்த நாடகக் கார்களுக்கு எதிராக விருப்பமின்றியேனும் எதிர்காலத்தில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும்'' என கடுமையாக சாடியுள்ளார்.
அத்தோடு, தம்முடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.