22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம் : மாற்றப்பட்ட அரங்கு
புதிய இணைப்பு
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றத்தின் 501 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கிற்கு மாற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (01) குறித்த மனுக்கள் விசாரணைக்காக 502 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கில் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு போதிய இடவசதி இன்மையால் 501 ஆம் இலக்க அரங்கிற்கு மாற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில் அந்த கோரிக்கையைக் பரிசீலித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 67 மனுக்களும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
40க்கும் மேற்பட்ட மனுக்கள்
நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15