சடுதியாக அதிகரித்தது பெற்றோலுக்கான தேவை
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலின் தேவை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க(Sumit Wijesinghe) தெரிவித்துள்ளார்.
சாதாரண நாளில் சுமார் 3300 தொன் எரிபொருள் பயன்படுத்தப்பட்ட போதிலும், தற்போது நாளொன்றுக்கு 4900 தொன்களாக அது அதிகரித்துள்ளதாக விஜேசிங்க தெரிவித்தார்.
இவ்வாறு எரிபொருள் விநியோகம் அதிகரித்துள்ள போதிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவு எரிபொருளை சேமித்து வைப்பதன் காரணமாக மக்கள் எரிபொருளை இழந்து தவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது டீசலின் தேவை குறைவடைந்துள்ளதாகவும், மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் காரணமாக இது ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மக்களுக்கு போதிய எரிபொருளை பெற்றுக் கொடுத்தால், தேவையற்ற நெரிசல் ஏற்படாது எனவும், எதிர்காலத்தில் எரிபொருள் விலை உயர்வை எதிர்பார்க்கலாம் எனவும் விஜேசிங்க தெரிவித்தார்.