ஹோர்முஸ் பதற்றத்துக்கு மத்தியில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு வரி குறைப்பு!
உலக எரிபொருள் சந்தையில் பெரும் பதற்றம் நிலவும் நிலையில், இந்திய மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை (Special Additional Excise Duty) கணிசமாகக் குறைத்துள்ளது.
இந்த முடிவு நேற்று (மார்ச் 26) இரவு அறிவிக்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் விவரித்துள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை, ஹோர்முஸ் நெருக்கடி காரணமாக ஏற்கனவே எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை பிராந்திய எரிசக்தி சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வரி சுமை குறைப்பு
இதன்படி, பெட்ரோல் மீதான லிட்டருக்கு ரூ.13 ஆக இருந்த சிறப்பு வரி, இப்போது ரூ.3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான ரூ.10 வரி முழுமையாக இல்லாது செய்யப்பட்டு, பூஜ்ஜியமாக (Nil) மாற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு எரிபொருள்களுக்கும் லிட்டருக்கு சுமார் ரூ.10 வரி சுமை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய எண்ணெய் இறக்குமதி பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகின் சுமார் 20-25 சதவீத எண்ணெய் விநியோகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது.
இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், நுகர்வோருக்கு எரிபொருள் விலை உயர்வு ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் அரசு இந்த வரி குறைப்பை மேற்கொண்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் இறுதி விலை
தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் இறுதி விலைகள் உடனடியாக மாற்றப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உயர்வை இது கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசு ஏற்கனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை பல்வேறு நாடுகளிலிருந்து (ஹோர்முஸ் அல்லாத பாதைகள்) அதிகரித்து வருகிறது.
நாட்டில் 60 நாட்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும் எண்ணெய்த் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா உலகின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நாடாக இருப்பதால், உள்நாட்டு தேவைக்கு போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது.
எனினும், உலக விலை உயர்வால் ஏற்படும் அழுத்தத்தைத் தணிக்க அரசு தனது வரி வருவாயை தியாகம் செய்து நுகர்வோருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |