பிள்ளையானுக்கு பிணை - நீதிபதிக்கு எதிராக அவதூறு : எடுக்கப்பட்ட உடன் நடவடிக்கை
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு (Sasi makendran) எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு அவதூறு விளைவிக்கும் முகமாக முகநுால் உள்ளிட்ட சில சமூக ஊடக கணக்குகளில் தவறான பதிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் தனக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
மேலதிக விசாரணை
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் பிள்ளையானுக்கு (Pillayan) பிணை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு போலியான தகவல்கள் மற்றும் தனது தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கி குறித்த சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக தனக்கு அவதூறு விளைவிக்கப்படுவதாக அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் சமர்ப்பித்த அறிக்கையின் பேரில் குறித்த ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக தகவல்களைப் பெறுவதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
