வெளிச்சத்திற்கு வந்த ராஜபக்சர்களின் திட்டம்
இந்த நாட்டில் அரசியலை மாற்றாமல் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது. எனவே, மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி (Sunil Handunneththi )தெரிவித்தார்.
நுவரெலியா – நானுஓயா பெரக்கும்புர பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இரவில் சிந்தித்துவிட்டு காலையில் தீர்மானம் எடுக்கும் விதத்திலேயே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“நாட்டில் இன்று பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால் மூன்று விடயங்களிலேயே அரசாங்கம் தங்கியுள்ளது. ஒன்று எப்படியாவது எண்ணெய் இறக்குமதி செய்வது. இரண்டாவது கடன் பத்திரத்தை நிராகரித்துக் கொள்ளாமல் தக்கவைப்பது. மூன்றாவது கடன் செலுத்துவதற்கான தவணையை நீடித்துக்கொள்வது.
இந்த மூன்றையும் தவிர நாடு பற்றியோ அல்லது மக்கள் பற்றியோ அரசாங்கத்திற்கு வேறு சிந்தனை இல்லை. எதையாவது விற்பனை செய்தாவது நாட்களை நகர்த்துவதுதான் திட்டமாக உள்ளது.
எனவே, அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது” என்றார்.
