வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதற்கான இலங்கையின் பாரிய முயற்சி!
முதலீடுகளை மேற்கொள்வதற்கான பின்புலம் இருந்தால் மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை நோக்கி வருவார்கள். அதற்கான பின்புலமே கொழும்பு துறைமுக நகரம் ஆணைக்குழுச் சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியை மீண்டும் வலுப்படுத்துவோமென நாம் கூறியிருந்தோம். அதன் பிரகாரம் மீண்டும் ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருவதை காணலாம்.
ஆனால், ரூபாயின் பெறுமதியை மீண்டும் வலுவாக்க முடியாதென எதிர்கட்சியிலிருந்து பொருளாதார நிபுணர்கள் கூறி குறுகியகால நன்மையை அடைந்திருந்தனர்.
அதேபோன்றுதான் தற்போது கொழும்பு துறைமுக நகரத்திட்டம் தொடர்பிலும் கூறுகின்றனர். கடன்களுக்கு பதிலாக நாட்டுக்கு புதிய வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவரும் ஒரு வேலைத்திட்டமே துறைமுக நகரத்தின் ஊடாக செய்ய முற்படுகிறோம்.
முதலீட்டாளர்களுக்கு முதலீடுகளை இலகுவாக மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே துறைமுக நகர ஆணைக்குழுக் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
துறைமுக நகரச் சட்டம் எந்த விதத்திலும் நாட்டுக்கு பாதகமானதல்ல. புதிதாக 83,000 ஆயிரம் தொழில்கள் இங்கு உருவாகும். இவ்வாறு 83,000 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் எமக்கு கிடைக்கப்பெற்றால் டொலர்கள் வெளியில் செல்லாது நாட்டுக்குள்ளேயே இருக்கும்.
டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இலகுவாக வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை. முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட்டதன் பின்னரே அந்த விடயம் சாத்தியமானது.
போட்டிமிக்க சந்தை சூழலில் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனில் அதற்கான பின்புலத்தை நாட்டில் உருவாக்க வேண்டும். அதனையே செய்து வருகிறோம்.
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு முதலீடாக வருமென நாம் எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய சூழலில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்தான் எமக்கு முதலீடாக வருகிறது. 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு முதலீடுகள் வருமானால் நாட்டில் பாரிய அபிவிருத்திகள் ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். தேசிய வருமானம் அதிகரிக்கும் என்றார்.