இந்தியப் பிரதமரின் வடபகுதி கரிசனை - பலாலியில் களமிறங்கவும் திட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பயணம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மோடி இந்தியாவில் இருந்து நேரடியாகவே விமானம் மூலம் பலாலிக்கு செல்ல திட்டமிடுவதான செய்திகள் வெளிவந்துள்ளன.
பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப்பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், பிரதமர் மோடியின் இந்தப்பயணம் குறித்த இந்தியத்தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிடவில்லை.
எனினும் அவர் இலங்கைக்கு பயணம் செய்யக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நரேந்திர மோடி இந்தியாவில் இருந்து நேரடியாகவே விமானம் மூலம் பலாலிக்கு முதலில் சென்று அங்கு இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தமிழ் கலாசார நிலையத்தை திறந்து வைத்த பின்னர் தான் அங்கிருந்து கொழும்புக்கு செல்வதற்கு இந்திய அதிகாரிகள் திட்டமிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வடபகுதி மீது சீன இராஜதந்திரிகள் அண்மைக்காலமாக கரிசனை கொண்டுள்ள நிலையில், இவ்வாறான ஒரு நகர்வின் மூலம் இந்தியா ஒரு செய்தியை சிறிலங்காவுக்கு வழங்க விரும்புவதாக கூறப்படும் போதிலும் இந்த நகர்வுகள் குறித்த இந்தியத்தரப்பு அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிடவில்லை.
இதற்கிடையே மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நேரத்தை ஒதுக்கித்தருமாறு இந்தியத்தரப்பிடம் கோரியுள்ளதாக அதன் தலைவர் இரா. சம்பந்தனும் தெரிவித்தார்.
தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்குரிய தீர்வு குறித்து தமிழ் கட்சிகள் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் அவர் பேச்சுக்களுக்கான நேரத்தை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
