ரணிலுக்கு ஆதரவு வழங்கும் மொட்டுக்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் ஆதரவு : வெளியான அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க முன்வந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும் புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
குறித்த அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பிரதமர் என்ற ரீதியில் தனது ஆசியையும் ஆதரவையும் எப்போதும் வழங்குவேன் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் (Kandy) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை தரிசித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், “அரசாங்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஆதரவளித்த பெரும்பான்மையான பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல கட்சிகள் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், கடந்த இரண்டு வருடங்களில் மிகுந்த சிரமத்துடன் முன்னோக்கி வந்த நாடு, தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வெற்றியை மேலும் பாதுகாப்பதற்கும் முன்னெடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். இத்தருணத்தில் உள்ளுராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து உறுப்பினர்களும் கைகோர்த்து வருகின்றனர்.
தேர்தலுக்கான வேட்புமனு
இதன் காரணமாக அடுத்த தேர்தலில் வேட்புமனு பெற முடியாது என யாரும் பயப்பட வேண்டாம். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அதற்காக, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்களுக்கு எனது முழுமையான ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவேன்” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |