யாழ். பருத்தித்துறை காவல்நிலையம் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு
யாழ்.பருத்தித்துறை (Point Pedro) காவல் நிலையத்தில் தமிழ் பேசத் தெரிந்த உத்தியோகத்தர்கள் 24 மணிநேர கடமையில் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்றையதினம் (23.10.2024) ஊடகவியலாளர் ஒருவர் செய்தி ஒன்றினை உறுதிப்படுத்துவதற்காக பருத்தித்துறை காவல் நிலையத்தின் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அங்கு கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், தமிழ் பேசத் தெரிந்த காவல்துறை உத்தியோகத்தர் கடமையில் இல்லை என தெரிவித்துள்ளார்.
அவசர முறைப்பாடு
தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் கடமையில் இல்லை என்றால் ஒரு அவசர முறைப்பாட்டினை பதிவு செய்வதற்கு ஒருவர் வந்தால் என்ன செய்வீர்கள் என வினவியவேளை, அவர்கள் நாளையதினம் தான் முறைப்பாடு பதிவு செய்யலாம் என அசமந்தமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் பிரதேசத்தில் உள்ள காவல் நிலையத்தில், தமிழ் பேசத் தெரிந்த காவல்துறை உத்தியோகத்தர் 24 மணிநேரமும் கடமையில் இருப்பது கட்டாயமாகும்.
சிங்களம் தெரியாத ஒருவர் ஒரு அவசர விடயம் குறித்து காவல் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கவோ, அல்லது வேறு விடயங்களுக்கோ காவல்நிலையத்திற்கு செல்லும்போது, தமிழ் பேசத் தெரியாத உத்தியோகத்தர் கடமையில் இருக்கும் போது தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே குறித்த காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி அவர்கள் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கடமை நேரங்களை அட்டவணையிடும்போது இந்த விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |