ஆயுதங்களுடன் கொள்ளையிட்ட ஆறு சந்தேக நபர்கள்..! (படங்கள்)
கலனிகம, படகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஆயுதங்களுடன் கொள்ளையிட்ட ஆறு சந்தேக நபர்களில் ஐவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பாணந்துறை மொரவின்ன, திபெத்த போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளதாக காவல்துறையினர் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டின் உரிமையாளர் சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பியிருந்தார்.
பிரதான சந்தேக நபர்

பிரதேசவாசிகளோடு இணைந்து யாத்திரை சென்றுவிட்டு கடந்த 6ஆம் திகதி இரவு மீண்டும் உரிமையாளர்கள் வீட்டிற்கு வந்துள்ளதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் வீட்டை அடைந்ததும் கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், தம்பதியின் கை, வாயைக் கட்டி, தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒரு மேசன் எனவும், அவர் உரிமையாளரின் வீடு கட்டப்படும் போது பல வருடங்களாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட முச்சக்கர வண்டி

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அவரது வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொள்ளையடிக்க முச்சக்கர வண்டியில் வந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் சந்தேகநபர்களால் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பாணந்துறை மஹாவில பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் இந்த முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்ற சாரதியை பயமுறுத்தி வெறிச்சோடிய வீட்டிற்கு அழைத்துச் சென்று கை கால்களை கட்டிவிட்டு முச்சக்கர வண்டியுடன் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் , பண்டாரகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.