மர்மமான முறையில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி!
உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையிலேயே உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காலி மாவட்டத்தின், பெந்தோட்ட பொலிஸ்நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினுள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், பலப்பிட்டிய, பாதேகம பகுதியைச் சேர்ந்த 58 வயதான உப பொலிஸ் பரிசோதகர் எனத் தெரியவந்துள்ளது.
இவர் நேற்று இரவு ரோந்து பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று, போக்குவரத்துப் பிரிவு மேசை மீது படுத்து உறங்கியுள்ளார்.
வெகுநேரமாகியும் உடல் அசைவற்று காணப்பட்டதால், சக உத்தியோகத்தர்கள் அவருக்கு அருகில் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பலப்பிட்டிய நீதிவான் சம்பவம் இடத்துக்கு சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்ததோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.