பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் சுட்டுக்கொலை
பொலிஸ் காவலில் இருந்த ஒரு சந்தேக நபர் இன்று காலை வெயாங்கொடவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
வெயாங்கொட பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்றிற்காக சந்தேகநபரை அழைத்து சென்ற வேளையில் அவர் தப்பிச் செல்ல முற்பட்டதை அடுத்து, இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 37 வயதான நிஷாந்த குமாரசிறி என்ற நபரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவராவார்.
கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது சந்தேகநபரினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.