காவல்துறை அதிகாரிகள் போல் வேடமிட்டு கொள்ளை: யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தங்களை காவல்துறை அதிகாரிகள் என கூறி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்றது.
சம்பவம் தெரியவருவதாவது, கடைக்குள் நுழைந்த சிலர் தங்களைப் காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
23 ஆயிரம் ரூபா பணம் கொள்ளை
அந்தக் கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றது என்று தகவல் கிடைத்துள்ளது என்றும் தேடுதல் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

கடைக்குள் நுழைந்தவர்கள் அங்கு தேடுதல் நடத்தியுள்ளனர். கடையில் இருந்த 23 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு, கடையிலிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினர் இன்று இருவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.