டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் குறித்து விளக்கமளித்துள்ள காவல்துறை
டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்து சாரதிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் காவல் அதிகாரிகளின் செயற்பாடு கடுமையான கடமை தவறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று (03.09.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாவு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “பாதுக்க மற்றும் கம்பஹா காவல் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
காவல்துறைமா அதிபர் விளக்கம்
இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் கீழ் 2026 மே 5ஆம் திகதி வெளியிடப்பட்ட மேலதிக அறிவித்தல் மூலம், காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபர் நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்திலும், காப்புறுதி நடைமுறையில் உள்ளதா என்பதை காவல் அதிகாரிகளால் இலவசமாக பின்வரும் வழிமுறைகளின் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1338# என்ற இலக்கத்திற்கு அழைத்து, காப்புறுதி இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளிட்டு உடனடியாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- 1338 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பி தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- 1338 என்ற அவசர அழைப்பு மையத்தை (Call Center) தொடர்புகொள்ள முடியும்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள 607 காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஊடாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் மீண்டும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.
ஏதேனும் காவல்துறை அதிகாரி டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுத்தால், அது தொடர்பில் அருகிலுள்ள காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அல்லது போக்குவரத்து தலைமையகத்தின் 070 4755 600 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என” பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |