நாட்டைவிட்டு தப்பிச் செல்லும் காவல்துறை உத்தியோகத்தர்கள்
உத்தியோகபூர்வமாக கடமையில் இருந்தவேளை கணிசமான எண்ணிக்கையிலான காவல்துறை உத்தியோகத்தர்கள் முன்னறிவிப்பின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சர்வதேச காவல்துறை மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்த காவல்துறை விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவத்துடன் ஆரம்பித்த தொடர் சம்பவங்களை தற்போதைய சம்பவம் எடுத்துக்காட்டுவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
நாரஹேன்பிட்டி காவல் நிலையத்தில்
மேற்கோள் காட்டப்பட்ட தகவல்களின்படி, நாரஹேன்பிட்டி காவல் நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை பரிசோதகர் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் கடமையில் இருந்து விலகியிருந்தார். அதேபோன்று தெல்தெனிய காவல்துறை பரிசோதகரும் இதே காலப்பகுதியில் வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
ஹோமாகம காவல்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் 2023ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக அங்கீகரிக்கப்படாத விடுப்பு எடுத்தமையும் இதில் உள்ளடங்கும்.
பதுளை பிரிவு குற்றவியல் விசாரணை ஆய்வகத்தின் பொறுப்பதிகாரி்
மேலும், பதுளை பிரிவு குற்றவியல் விசாரணை ஆய்வகத்தின் (SOCO) பொறுப்பதிகாரி நாட்டை விட்டு வெளியேறியதையடுத்து, கடந்த 14ஆம் திகதி முதல் கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த காவல்துறை பரிசோதகர் ஒரு பயணத்திற்காக பிரான்ஸ் சென்றார், பின்னர் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் அந்த நாட்டில் புகலிடம் கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |