நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..! மொட்டுவின் நிலைப்பாடு வெளியானது
எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் பல தரப்பினரும் வலியுறுத்தியபோதிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)அதிபர் அல்லது நாடாளுமன்றம் என எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அதிபரிடம் கோரும் தீர்மானத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பிக்குமா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள
தேர்தல் எதுவாக இருந்தாலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக தெரிவித்த காரியவசம், குறிப்பிட்ட விடயம் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இதுவரை கவனம் செலுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் மத்திய குழுவுடன் கலந்தாலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த விடயத்தில் நாங்கள் இதுவரை முடிவு செய்யவில்லை. இது கட்சியின் செயற்குழு மற்றும் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட வேண்டும். எனவே, இவ்விவகாரம் குறித்து அந்த இரு குழுவும் முடிவு செய்யும்,'' என்றார்.
பசில் ராஜபக்சவின் கருத்து
எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச, அண்மையில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், தேர்தல்கள் தொடர்பாக சில கருத்துக்களை வெளியிட்டதுடன், அதிபர் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், குடிமக்கள் பகுத்தறிவுடன் வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்து இதுதானா என காரியவசமிடம் ஊடகமொன்று வினவியபோது, அவர் கூறியதாவது: எனது தனிப்பட்ட கருத்தில் அவர் (பசில் ராஜபக்ச) மிகவும் சரியானவர்.
ஆனால், முழு பெரமுனவும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளது என்று அர்த்தமல்ல. அது கூட்டாக முடிவு செய்யப்பட வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |