ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரவி செனவிரத்ன (Ravi Seneviratne) நாடாளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவிடம் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், அதனை கடுமையாக மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்த ரவி செனவிரத்ன, “நேற்று (2025.10.08) நாடாளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவின் அழைப்பைத் தொடர்ந்து முன்னிலையாகி, எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும், ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் கூறவில்லை எனவும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
விசாரணை நடத்துமாறு பணிப்பு
மேலும், இத்தகைய தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது விசாரணை நடத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரவி செனவிரத்னவின் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 300ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
உறுதிப்படுத்திய நிசாம் காரியப்பர்
இந்தநிலையில் அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் துரிதமான விசாரணைகளின் ஊடாக பல்வேறு கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார் என்ற விடயம் வெளியாகியுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (08) நடைபெற்ற நாடாளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நிசாம் காரியப்பரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எப்போது கைது செய்யப்படுவார் என பலரும் எதிர்பார்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

