கிளப் வசந்த படுகொலையின் பிரதான சந்தேக நபர் : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
கிளப் வசந்த படுகொலையின் பிரதான சந்தேக நபரான "லொக்கு பெட்டி" (Loku Pattie) எனப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வாவை தேவையேற்பட்டால் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (04) காலை 7:45 மணியளவில் டுபாயில் (Dubai) இருந்து தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில் "லொக்கு பெட்டி" தொடர்பான விசாரணைகள் குறித்து கருத்து தெரிவித்த போதே காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியாட்சகருமான புத்திக மனதுங்க (Buddhika Manatunga) இவ்வாறு குறிப்பிட்டார்.
உயர்மட்ட குற்றவாளி
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "லொக்கு பெட்டி" தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், அதுருகிரியவில் 'கிளப் வசந்த' என்று அழைக்கப்படும் வசந்த பெரேராவின் சமீபத்திய கொலை, அத்துடன் பல முந்தைய கொலைகள், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருத்தல் உள்ளிட்ட பிற குற்றங்களில் அவர் ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
"லொக்கு பெட்டி" என்பது இந்தக் குற்றங்களில் பலவற்றிற்காகத் தேடப்படும் ஒரு உயர்மட்ட குற்றவாளி ஆவார். அதன்படி, எதிர்காலத்தில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அனைத்து சட்ட நடவடிக்கைகளும் நாட்டின் சட்டங்களின்படி மேற்கொள்ளப்படும்.
இதேவேளை, கடந்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 11வது தேடப்படும் குற்றவாளியாக "லொக்கு பெட்டி" இருக்கின்றார்.
இலங்கையில் குற்றங்களைச் செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வரும் செயன்முறை தொடரும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
