பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் : காவல்துறை எச்சரிக்கை
தங்களுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும், கைதுக்கு அஞ்சித் தலைமறைவாகவோ அல்லது பிடிபடாமல் விலகியோ இருக்கும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு என்பதை காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
1979-ஆம் ஆண்டின் 15-ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 60-வது பிரிவின் கீழ், பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் கைதுக்கு அஞ்சித் தப்பி ஓடும் ஒரு நபரை, குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரி நீதிமன்றம் எழுத்துபூர்வமான அறிவிப்பை (proclamation) வெளியிட முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு 30 நாட்கள் அவகாசம்
இந்த அறிவிப்பில், சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு குறைந்தது 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரும் அந்த நபர் ஆஜராகத் தவறினால், அச்சட்டத்தின் 61-வது பிரிவின் கீழ் நீதிமன்றம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
சொத்துக்கள் பறிமுதல்
இதில் சம்பந்தப்பட்ட நபருக்குச் சொந்தமான அசையும் அல்லது அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான (attachment) உத்தரவை பிறப்பிப்பதும் அடங்கும்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் வேண்டுமென்றே கைதுக்கு அஞ்சித் தலைமறைவாக இருப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை இந்த நினைவூட்டலை வெளியிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |