போராட்டத்திற்கு சென்ற தாய்மார்களை அநாகரிகமாக நடத்திய காவல்துறையினர்! (காணொலி)
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். நேற்றைய தினம் பௌத்த வழிபாட்டுத் தளங்களுக்கு சென்ற விசேட வழிபாட்டில் ஈடுபட்டதுடன் வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதற்கான சன்னஸ் பத்திரத்தையும் வழங்கியுள்ளார்.
அத்துடன் சுன்னாகம் கந்தரோடை பகுதியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவிற்கு செல்லவிருந்த நிலையில் மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனால் அடிக்கல் நாட்டு விழாவிற்கு செல்வதை புறக்கணித்தார் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச.
இந்நிலையில் இரண்டாம் நாள் பயணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லவிருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக நேற்றைய தினம் வேலன் சுவாமிகள் அறிவித்திருந்தார்.
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நீதி கேட்டு போராட்டத்துக்கு சென்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரை சிறிலங்கா காவல்துறையினர் மட்டுவில் பிரதேசத்தில் வைத்து தடுத்து நிறுத்தியதுடன் அவர்களை அநாகரிகமாகவும் நடத்தியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த உறவுகள் நடுவீதியில் படுத்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். “காவல்துறையினர் தங்களின் கைகளைப் பிடித்து இழுத்துள்ளனர் - ஏன் அவர்களுக்கு சட்டம் தெரியாத” - “எங்களுக்கு காவல்துறையின் பெரிய அதிகாரி அடித்தவர்” என்று கோசமிட்டு போராடியுள்ளனர்.
சாரதியின் வாகன ஆவணங்களையும் காவல்துறையினர் பரிசோதித்துள்ளதுடன் காணொளியும் பதிவு செய்துள்ளனர்.
முல்லைத்தீவிலிருந்து வருகை தந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களே யாழ்ப்பாணம் - மட்டுவில் பகுதியில் வைத்து இவ்வாறு வழிமறிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் போராட்டத்திற்கு காவல்துறையினரோ இராணுவத்தினரோ எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்த கூடாது என பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
