உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் பின்னணியில் அரசியல் சதி : மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவில் அரசியல் ஆதிக்கங்கள் காணப்பட்டதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பான அறிக்கை குறித்து சர்வதேச ஊடகமொன்றுடனான நேர்காணலின் போது சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தண்டிக்கப்பட்டது எமது முயற்சியால் மாத்திரமே. மாறாக நீதித்துறை அல்லது சட்டத்துக்காக போராடும் தரப்பினரால் அல்ல.
அடிப்படை உரிமை மனு
நாம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் காரணமாக இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சில குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை நாம் இன்னும் படித்து வருகிறோம்.
விசாரணைகளின் அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதா எனவும் முக்கியமான சில பக்கங்கள் எம்மிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளதா எனவும் நாம் ஆராய்ந்து வருகிறோம்.
தாக்குதல் தொடர்பான விசாரணைகள்
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை சர்வதேச நாடுகளில் உள்ள சாட்சிகளிடம் முன்னெடுக்க முடியாமல் போனதாக அதிபரின் ஆணைக்குழு தெரிவித்தது. இந்த நடவடிக்கை அரசியல் ஆதிக்கத்தை வெளிக்காட்டுகிறது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்களால் பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.அவை பல அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தன.
எனினும், எந்தவொரு ஆணைக்குழுவினதும் பரிந்துரைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த ஆணைக்குழுக்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் மூலம் குற்றவாளிகளாக பெயரிடப்பட்ட யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக படித்ததன் பின்னர், தம்மை சந்திக்குமாறு ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
நாம் எதற்கு அவரை சந்திக்க வேண்டும்? எமக்கு தீர்வு வேண்டுமென்ற எண்ணத்தில் நாம் அவரிடம் போவோம்.
எனினும், குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக அமைச்சர் கூறுகிறார்.
இரு வேறு நிலைப்பாடுகள்
அமைச்சரும் ரணில் விக்ரமசிங்கவும் இரு வேறு நிலைப்பாட்டில் உள்ளனர்.
இந்த பின்னணியில், நாம் பிரிந்து இருப்பதாக சிறிலங்கா அதிபர் கூறுகிறார். அவரால் இவ்வாறான பொய் கருத்துக்களை முன்வைக்க முடியாது.
எமக்குள் பிளவுகள் இருப்பதாக வெளிக்காட்டி விசாரணைகளை தடை செய்வதற்காக இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள்.
இதுவே அவர்களின் தேவை. எனினும், அதனை செய்ய அவர்களுக்கு இடமளிக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |