அரசியல் தலைவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்திகள்!
உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயேசு நாதர் போதித்த மற்றும் நடைமுறையில் வாழ்ந்துகாட்டிய அமைதி, அன்பு, இரக்கம், சகவாழ்வு, கருணை போன்ற பண்பட்ட மனித சமூகத்தின் அடித்தளத்தை வடிவமைக்கும் உன்னத பெறுமானங்களை உள்ளடக்குகிறது. சமூக ரீதியாக, நத்தார் கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும், பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கும், பகைமைகளை மறந்து பிணைப்பினை புதுப்பிப்பதற்குமான ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும். கொவிட் -19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாக செயலற்றிருக்கும் உலகை மீண்டும் எழுச்சி பெறச்செய்ய இவ்வாறான நன்நெறிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு வருடத்திற்கும் முன்னர் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் கடுமையான வலிகளை சுமந்தவாறே இந்த நாட்டின் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆயினும்கூட, அந்த அச்சங்களையும் பாதுகாப்பற்ற தன்மையையும் அகற்றுவதற்கும், அச்சம், சந்தேகம் இல்லாமல் அனைவரும் சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவதற்கும் எமக்கு முடிந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் அவ்வாறே வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்துவதாக பிரதமர் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இது மனித அன்பையும், கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு நற்செய்தியாகும். இந்த புனிதமான நாளில் அமைதி மற்றும் கருணையின் செய்தி நம் இதயங்களில் உறுதியாக விளங்க வேண்டும்.
ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளை தேடிச் சென்று அவர்களுடன் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஆன்மீக ரீதியில் மனதை ஈடுபடுத்தும் ஒரு ஆழமான விடயம் இந்த நத்தார் பண்டிகையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சூரியனின் செய்திச் சேவை தமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது வாழ்த்து செய்தியில் கிறிஸ்மஸ் மனிதர்களை மதிக்கவும் இயற்கையை ஆராதிக்கவும் வழிகாட்டும் ஓர் பண்டிகை என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கிறிஸ்மஸ் பண்டிகை சகோதரத்துவத்தை முன்வைத்து காட்டும் ஓர் வழிபாட்டு முறை எனவும் தெரிவித்துள்ளார்.