தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தான பொன். சிவகுமாரன் : சிவாஜிலிங்கத்தின் அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தான தியாகி பொன். சிவகுமாரனின் நினைவுதினத்தை கட்சிபேதங்கள் கடந்து தொடர்ந்து நினைவுகூர வேண்டும் என வல்வெட்டித்துறை நகர பிதா எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் நீண்ட பங்களிப்பை கொண்ட எம். கே. சிவாஜிலிங்கம் நோயுற்று இருக்கும் நிலையில் சிவகுமாரனின் 52ஆவது ஆண்டு நினைவேந்தல் தினமான நேற்று (05) நினைவுப்பகிர்வு ஒன்றை வெளியிட்டார்.
அந்த நினைவுப்பகிர்வில், ”நாம் பாடசாலை மாணவர்களாக இருந்தபோது அவரின் தலைமையில் பல போராட்டங்களில் பங்கேற்றிருந்தோம். மருதனார்மடத்திலிருந்து பாதயாத்திரையாக யாழ்ப்பாணம் நகரம் வரை சென்றிருக்கிறோம்.
தாக்குதல் முயற்சி
தமிழாராய்ச்சி மாநாட்டின் படுகொலைகள் அவரை உலுக்கியது. இதைத் தொடர்ந்தே அங்கு காவல் பணியிலிருந்த காவல்துறை அதிகாரிகள்மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டார். இதேபோன்றே துரையப்பாவையும் கொலை செய்ய முயன்றார்.
அவர் தேடப்படும் நிலையில் இந்தியா செல்ல முனைந்தார். அப்போது மயிலிட்டியை சேர்ந்த ஒருவரால் ஏமாற்றப்பட்டார். அவர் வீரச்சாவடைய முன்னர் ஒரு வாரத்துக்கு முன்பாக அவரை கடத்தல் படகில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய முனைந்தோம்.

ஆனால், தனியாகச் செல்ல முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். இதன் பின்னரே அவர் சயனைட் அருந்தி உயிரிழந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தின்போது பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.
முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் பெண்கள் மயானத்துக்கு வந்ததும் இதன் போது தான். பின்னர், சிவகுமாரனுக்கு சிலை வைக்கப்பட்டது. அந்தச் சிலையை தொடர்ந்து வைக்கப்பட்ட 4 சிலைகள் உடைக்கப்பட்டன. விழவிழ எழுவோம் என்பது போல சிலையாக எழுந்து இன்றும் நிமிர்ந்து நிற்கிறான் சிவகுமாரன்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது உயிர்த் தியாகியான பொன். சிவகுமாரனின் நினைவுதினத்தை கட்சிபேதங்கள் கடந்து - தொடர்ந்து நினைவுகூரவேண்டும். இதன் மூலமாகத்தான் எதிர்கால சந்ததிக்கு தமிழின விடுதலை உணர்வை - வரலாறுகளை ஊட்டிச் செல்ல முடியும்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |