போர்ட் சிட்டி ஆணைக்குழு தொடர்பில் அம்பலமான தகவல்
துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை அவசரமாக நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுக்கும் முயற்சியின் ஊடாக, அதன் ஆபத்து தெளிவாக வெளிப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
ஆணைக்குழுவில் இலங்கையர்களை நியமிப்பது தொடர்பிலான விடயத்தில் திருத்தம் மேற்கொள்வதாக அரசாங்கம் நீதிமன்றில் தெரிவித்ததன் ஊடாக, ஆணைக்குழுவில் வெளிநாட்டினர் சேர்க்கப்படுவார்கள் என்ற விடயம் அம்பலமாகியுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அநுர குமார திசாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை அரசாங்கம் ஏப்ரல் 08ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள 7 விடயங்கள் இலங்கை வரிச் சட்டங்களுக்கு பொருந்தாது எனவும், மேலும் 14 விடயங்கள் குறித்த துறைமுக நகர பிரதேசத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டது.
இவை அனைத்தையும் விட 05-07 பேர் கொண்ட ஒரு குழுவுக்கு இந்த பகுதியில் அதிகாரமளிக்கப்படுவதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரைபிற்கு அமைய அந்த நபர்கள் இலங்கையர்களாக இருப்பதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் போகலாம்.
இவர்களில் பெரும்பாலானவர்களை இலங்கையர்களாக நியமிப்பது தொடர்பில் சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதாக நீதிமன்றில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாதகமான விளைவுகளை உள்ளடக்கிய ஒரு விடயத்தில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
இந்தச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்திய தொடக்கத்திலிருந்தே, அரசாங்கத்திற்கு ஒரு அடிப்படை நோக்கம் இருந்தது. அதாவது, இந்தச் சட்டமூலம் குறித்து சமூகத்தில் முறையான விவாதத்திற்கு இடமளிப்பதில்லை என்பதாகும்.
இது நாட்டின் இறையாண்மை தொடர்பான பிரச்சினைகளை எழுப்புவதோடு ஒரு கறுப்பு பொருளாதார மையமாக மாறக்கூடும் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.
இந்தச் சட்டம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். எனவே, சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன் மக்களுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும்.
மக்களின் வெளிப்படையான, விரிவான கலந்துரையாடலுக்கு பின்னர் அதனை நிறைவேற்ற முடியும். ஆனால் அரசாங்கம் இதனை மறைத்து அவசரமாக நிறைவேற்ற முயற்சிப்பதன் பின்னணியில் இந்தச் சட்டமூலத்தின் ஆபத்து தெளிவாகிறது என்றார்.