நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழறுபடி! விசாரணை செய்யக்கோரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாாதார ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பில் ஏற்பட்ட குழறுபடி தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது ஆளும் கட்சியின் இரண்டு வாக்குகள் குறைவாக கணக்கிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக 148 வாக்குள் ஆதரவாக வாக்களிக்கப்பட்டதாக காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், 150 வாக்குகள் இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காண்பிக்கப்படாமை குறித்து விசேட விசாரணைகளை நடத்துமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை நிறைவேற்றும் போது அது சம்பந்தமாக கிடைத்த உண்மையான மக்களின் பிரதிநிதித்துவத்தின் விருப்பத்தை காட்டாமையானது மிகவும் பாரதூரமான நிலைமையாக நாங்கள் காண்கின்றோம்.
இப்படியான ஒன்று எப்படி நடந்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்த போது அதனை ஏன் காண்பிக்கவில்லை என்பது குறித்து விசேட விசாரணை நடத்துமாறு நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.