பாரிய அழிவை சந்திக்க நேரிடும்! ராஜபக்ச அரசுக்கு இடித்துரைப்பு
இலங்கையில் வெளிநாட்டு ஈழ அரசு உருவாவதற்கு தேவையான சட்டங்களை கோட்டாபய - மஹிந்த அரசாங்கம் இயற்றுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் தமிழீழமோ வெளிநாட்டவர்களின் ஈழ அரசோ உருவாக்கப்படுவதற்கு தாம் எதிரானவன் என பொரளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கொரோனா அச்சுறுத்தலினால் நாடு முடக்கப்படவேண்டிய சூழலில் நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து, நாட்டின் ஒற்றமைக்கு துரோகம் இழைத்துவிட்டு வெளிநாட்டு அரசு ஒன்றை உருவாக்குவதற்கான சட்டத்தை இயற்றிக்கொள்வதற்காக அரசாங்கம் அடுத்த மூன்று நாட்களும் செயற்படவுள்ளது.
தனித்தனியாக சட்டம் இயற்றிக்கொண்டு தனியான வரியை வசூலித்துக்கொண்டு வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்து வருகிறது.
நாங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்கள், அதைப்போலவே வெளிநாட்டவர்களின் ஈழம் ஒன்று தோன்றுவதற்கும் நாங்கள் எதிரானவர்கள்.
நமது நாடு எதிர்காலத்தில் போருக்கான மத்திய நிலையமாக மாற்றமாகலாம். உலக சக்திகளிடம் அகப்பட்டு பாரிய அழிவை சந்திக்க நேரிடலாம்.
உலக வல்லரசுகளின் பிரச்சினைகளுக்கு இலங்கை தலையிடும் வகையிலும் வெளிநாட்டு விமான செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு கடற்படை விவகாரங்களுக்கு வெளிநாட்டு பணம் இலங்கையில் வைப்பிலிடச் செய்யவும் வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான காலணித்துவமாக துறைமுக நகரை நாட்டில் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என்றார்.