சுரேஷ் சலேயின் மேன்முறையீட்டு மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதன்படி, குறித்த மனு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரியே சுரேஷ் சலே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
விஜயதாச ராஜபக்சவின் அறிக்கை
இந்த மனு இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்தியல் இலங்கைக்குள் எவ்வாறு செயற்பட்டது என்பது குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.

39 இலங்கையர்கள் சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் இது குறித்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தாக சுட்டிக்காட்டினார்.
மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அதற்குப் பின்னால் வெளிநாட்டு தீவிரவாதக் குழுவொன்றின் கருத்தியல் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தபோதிலும், அப்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய ஷானி அபேசேகர அது குறித்து முறையான விசாரணைகளை நடத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகளை ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |