முல்லைத்தீவை நோக்கி வெற்றி நடைபோடும் பேரணி மேலும் ஒரு நாள் நீடிப்பு!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்ட பேரணி மூன்றாவது நாளான இன்று திருகோணமலை நகரிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்கின்றது.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்,மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் என்பன உள்ளிட்ட அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றைக் கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கேட்டும் இந்த போராட்டம் தொடர்கிறது.
எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பேரணியை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை போராட்டங்களை நடத்த நீதிமன்றங்களின் மூலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்போது மேலும் ஒரு நாள் தாமதமாகவே யாழ்ப்பாணத்தை போராட்டம் வந்தடையுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் எதிர்வரும் 7 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.