மின் விநியோகம் தொடர்ந்தும் தடைப்படும் - வெளிவந்த அறிவிப்பு
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை பெற்றுத்தரும் வரை மின் விநியோகம் தொடர்ந்தும் தடைப்படும் என இலங்கை மின்சாரசபையின் ஊடக பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் நவமணி (Navamani) தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட நேர அட்டவணை ஊடாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றும் அறிவிப்புக்கு மாறாக பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டது.
இது குறித்து இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு நடத்திய அவர், இதற்கான காரணங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
“நாட்டில் கொழும்பு உட்பட சில பகுதிகளில் இன்றும் திடீர் மின்துண்டிப்பு இடம்பெற்றது.
மின் உற்பத்தி நிலையங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிகமான மின்நிலையங்களில் மின் பிறப்பாக்கிகள் செயலிழந்தமையே இதற்கு காரணமாகும்.
அத்துடன் மின்சாரசபைக்கு தேவையான உராய்வு நீக்கி எண்ணெய் கிடைக்கப்பெறாததால் தேசிய மின்சார கட்டமைப்புக்கு 300 மெகாவோட் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது.
அதனாலே இவ்வாறு நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படுகிறது” என்றார்.