திடீர் மின்வெட்டு! சபையில் கடும் வாய்தர்க்கம்
இலங்கை முழுவதும் நேற்றைய தினம் திடீர் மின்தடை ஏற்பட்டமை தொடர்பாக நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் வாய்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
மின்சாரத்திற்காக அதிக பணம் செலவழிக்கும் நாட்டில் பாதுகாப்பின்மைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
எனினும் ”எதிர்க்கட்சித் தலைவர் கோரும் விசாரணைகளை தம்மால் முன்னெடுக்க முடியாது என்று இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
மக்களின் இயல்பு வாழ்க்கை
கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இலங்கை முழுவதும் நேற்று மாலை முதல் மின் தடை ஏற்பட்டது.
இதனால், நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டதுடன், பொது மக்களும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இந்த விடயம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் தர்க்கம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக கூறினார்.
எதிர்காலத்தில் பேரழிவு நிலை
மின்சாரத்திற்காக அதிக பணம் செலவழிக்கும் நாட்டில் பாதுகாப்பின்மைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
நாட்டிற்கு உகந்த மின்சார கட்டமைப்பு தேவை என்றும், மின் சபையை தனியாருக்கு மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் பேரழிவு நிலை உருவாகலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஒரு மின்கடத்தி பழுதடைந்ததன் காரணமாக முழு நாட்டின் மின்சார கட்டமைப்பும் எவ்வாறு தடைபட்டது என்பது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை தேவை என்றும், இந்த மின்சாரத் தடையின் ஊடாக நேற்றைய தினம் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்த துல்லியமான பகுப்பாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சி தலைவருக்கு பதில் அளித்த இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, ”எதிர்க்கட்சித் தலைவர் கோரும் விசாரணைகளை தம்மால் முன்னெடுக்க முடியாது என்றும் இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சு இணைந்து மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.
மின்சார விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறே மின் தடை ஏற்பட்டமைக்கு காரணம் என்றும் நுரைசோலை மின்நிலையத்திலும் இதனால் பாதிப்பு ஏற்பட்டது என்றும் கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல, ”2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதியும் 7 ஆம் திகதியும் நாடாளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் 6 மணித்தியாலங்கள் நாடு முழுவதும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டது. மின்சக்தி அமைச்சு உரிய காலத்தில் குறித்த பணிகளை செய்ய முடியாததன் காரணமாகவே இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்தது” என கூறினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா, இயற்கையான ஏற்பட்ட கோளாறுகளையும் அரசாங்கத்தின் மீது சுமத்துகின்றனர் என்றும் கீழ்த்தரமான அரசியலை செய்ய வேண்டாமென்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.