ரணில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் உதவ மாட்டேன் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு
எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு உதவுவதைத் தவிர்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி தலைவர்களுடன் உடுகம்பலை அரசியல் காரியாலயத்தில் இன்று (2) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய, அதிபர் தேர்தலில் யானைச் சின்னமோ, பொஹொட்டுவ சின்னமோ அல்ல, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுச் சின்னத்தில் தேசிய வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவு
இதேவேளை எதிரணியினர் என்ன சொன்னாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதிபராக வர வேண்டுமானால் அதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு தேவை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) அதிபர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் கட்சியில் கலந்துரையாடல் இல்லை எனவும், அவரை அதிபர் வேட்பாளராக நியமித்தால் அவருக்கு உதவாமல் அரசியலில் இருந்து மௌனிக்கப்படுவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாமல் ராஜபக்ச அதிபர் ஆகுவதற்கு இன்னும் காலம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |