தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் : பிரசன்ன ரணவீர
நாட்டின் சனத்தொகையில் 2% மாத்திரம் உள்ள தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கையை எதிர்வரும் 5 வருடங்களில் 10% ஆக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
மேலும், க.பொ.த சாதாரண தரம் வரை கல்விகற்றுவிட்டு முச்சக்கரவண்டி சாரதிகளாக பணிபுரிபவர்களுக்கு, இரண்டாம் நிலை தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரசன்ன ரணவீர இதனைத் தெரிவித்தார்.
தொழில்முனைவோராக
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இந்த நாட்டில் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பாரிய பொறுப்பை அதிபர் ரணில் விக்ரமசிங்க என்னிடம் வழங்கினார்.
நமது பாரம்பரிய தொழில் முயற்சியாளர்களைப் பாதுகாத்து தொழில்முனைவோராக அவர்களை உருவாக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டுள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும், நம் நாட்டின் பல்கலைக்கழகங்களில் இருந்து ஏராளமான இளைஞர், யுவதிகள் பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள்.
ஆனால் அவர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்களில் அதிகமானோர் தொழிற்படையினர் என்ற வட்டத்திற்குள்ளே தங்கிவிடுகின்றனர்.
இவ்வாறு பட்டம் பெறுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் தொழில்முனைவோராகும் வாய்ப்புக் கிடைத்தால், அது நாட்டுக்கு பெரும் பலமாக அமையும்.
நாட்டின் அபிவிருத்தி
இதன் காரணமாக, நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கு அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும், நிலைபேறான அபிவிருத்தி மூலம் சூழல்நேய தயாரிப்புகளுக்கு சர்வதேச சந்தையில் பெரும் கேள்வி உள்ளது.
மேலும், உலகம் பூராகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை நுகரும் போக்கு காணப்படுகிறது. பங்களாதேஷ் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், உலக சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில்போது, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வது அவசியமாக உள்ளது.
அந்நியச் செலாவணி
அந்தப் பொருட்களுடன், ஏற்றுமதி சார்ந்த பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டும். உலகச் சந்தையின் கேள்விக்கு ஏற்ப இத்தகைய பொருட்களைத் தயாரித்தால் நாட்டுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியின் அளவு அதிகரிக்கும்.
இந்த அமைச்சின் கீழ் தேசிய வடிவமைப்பு நிலையம், தேசிய அருங்கலைகள் பேரவை, லக்சல போன்ற நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் நவீன உலகுக்கும் நாட்டுக்கும் ஏற்ற வகையில் புதிய தயாரிப்புகளை உருவாக்க முடியும்.
நம் நாட்டிற்கு தனித்துவமான வடிவமைப்புகளை உருவாக்குவதில் கிராமங்கள் உள்ளன. அவர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதன் மூலம், அவர்களை புதிய தொழில்முனைவோராக மாற்றும் வாய்ப்பு உள்ளது.
இலக்கை அடைவதற்கு
அரசாங்கம் என்ற வகையில் அந்த இலக்கை அடைவதற்கு செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் மட்டும் உலகை வெல்ல முடியாது.
போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ளும் வகையில் புதிய தயாரிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். சார்ந்திருக்கும் மனப்பான்மையிலிருந்து விடுபட்டு சுயமாக எழுந்து நிற்கும் தேசமாக மாற வேண்டும்.
நாம் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அந்த உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நகரும் பயணம் நமது அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சர்வதேச சந்தை
அதன் மூலம் அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப செயல்பட திட்டமிட்டுள்ளோம். சர்வதேச சந்தையை வெற்றிகொள்ள, நம் நாட்டில் சில சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
குறிப்பாக சில தடைகள் தொடர்பாக, சுற்றுச்சூழல் அமைச்சு உட்பட பல அமைச்சுக்களால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதில், அவர்களின் பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருட்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
அத்துடன் இந்நாட்டில் பெருமளவிலான இளைஞர்கள் முச்சக்கரவண்டி சாரதிகளாக தொழில் செய்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து அவர்களை மீட்டெடுக்க இரண்டாவது நிலை தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இதற்கு, நீர்க்குழாய் பழுதுபார்த்தல், மின்சார தொழில்துறைப் பயிற்சி போன்ற தொழில்முறை பயிற்சிகளை வழங்க முடியும் மேலும், தற்போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக கடன் வசதிகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மக்கள் தொகையில் தொழில்முனைவோர் சுமார் 2% மாத்திரமே உள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை 10% ஆக உயர்த்த வேண்டும்.
இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு அவர்களின் ஆதரவைப் பெற முடியும்.
நமது நாட்டில் அறிவுசார்ந்த மனித வளம் உள்ளது. தேசிய உற்பத்தியை அதிகரிக்கவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அவர்களின் பங்களிப்பும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.” என்றார்.