குறைந்த சம்பளத்தைப் பெற்று பாரிய பணியைச் செய்யும் முன்பள்ளி ஆசிரியர்கள் : வடக்கு ஆளுநர் பாராட்டு
முன்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்று பாரிய பணியைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற 337 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (10) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
முன்பள்ளி ஆசிரியர்களின் பணி
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் “குழந்தைகளை உருவாக்குவது என்பது பாரிய ஒரு பணி. ஒரு சிற்பத்தை செதுக்குவதற்கும், குழந்தைகளை உருவாக்குவதற்கும் பாரிய வித்தியாசங்கள் இல்லை.

குழந்தை பிறந்தது முதல் 7 வயதுக்குள் தனக்கு தேவையான அத்தனை விடயங்களையும் கற்றுக் கொள்வதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே, குழந்தைகளின் முக்கியமான காலப்பகுதியை நீங்கள் உங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளீர்கள்.
நீங்கள் ஆற்றுகின்ற பணி மிக முக்கியமானது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில், மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்று, குடும்பச் சுமையையும் தாங்கிக் கொண்டு நீங்கள் ஒரு பாரிய பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அதற்காக வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அத்தனை முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கௌரவத்துடன் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்வி அமைச்சு நடவடிக்கை
உங்களுக்கான மறுசீரமைப்புகளை கல்வி அமைச்சு (Ministry of Education) தற்போது மேற்கொண்டு வருகிறது. உங்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சுடன் பல தடவைகள் நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம்.

புதிய கல்விச் சீர்திருத்தத்தில் முன்பள்ளிகளுக்கான செயற்பாடுகள் மற்றும் உங்களை சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
நாட்டின் பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களுக்குள் கல்வி மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வடக்கு, கிழக்கில் சேவையாற்றக்கூடிய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பாடநெறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது“ எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்