திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிக்கினர்
பேருந்தில் பயணித்த பயணிகளின் பணப்பைகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட சொத்துக்களை திருடிய கர்ப்பிணிப் பெண்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த மூவர், ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின், இரண்டு தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தம்புத்தேகம குடாகம மற்றும் புலத்சிங்கள வீதி இங்கிரிய பிரதேசங்களில் வசிக்கும் 20, 23 மற்றும் 30 வயதுடைய இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மூன்று பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்துக்குள் திருடப்பட்ட நகை
கொழும்பில் இருந்து தம்புத்தேகம ஊடாக அனுராதபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், பேருந்திற்குள் இருந்த தனது நகையை யாரோ திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்ததையடுத்து, பேருந்தை அனுராதபுரம் காவல் தலைமையகத்திற்கு கொண்டு சென்றதுடன், சந்தேகநபர்கள் மூவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
முதலில் பேருந்தில் சந்தேகத்திற்கிடமான சில பெண்கள் மீது, பெண் காவல்துறையினர் நடத்திய சோதனையில், கர்ப்பிணி ஒருவரின் உச்சியில் மறைத்து வைத்திருந்த 165000 ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸ், மற்றொரு பெண்ணின் உடலில் மறைத்து வைத்திருந்த 2700 மில்லி கிராம் ஹெரோயின்,மற்றைய பெண்ணிடம் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும், 7820 ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வசிப்பிடங்களை மாறி மாறி
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் முறையான அடையாள அட்டையோ, அவர்களை சட்டரீதியாக அடையாளம் காண்பதற்கான ஆவணமோ இல்லை எனவும், விசாரணைகளின் போது சந்தேக நபர்கள் வெவ்வேறு பிரதேசங்களில் தங்களுடைய வசிப்பிடங்களை மாறி மாறி குறிப்பிட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அது ஹெரோயின் என்பது தனக்குத் தெரியாது என்றும், பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த தனது கணவரிடம் இருந்து அதனை வாங்கி கொண்டு வந்ததாகவும் சந்தேகநபர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த பெண்கள் உள்ளிட்ட பெண்கள் கும்பல், நாடளாவிய ரீதியில் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் அனுதாபத்தை பெறவும், சந்தேகத்தை தவிர்க்கவும், சட்டத்திலிருந்து தப்புவதற்காக குழந்தை இருப்பதை ஆயுதமாக பயன்படுத்தியதாக இந்த செயலில் ஈடுபட்டுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |