ஈஸ்டர் தாக்குதல் நடந்திருக்காவிட்டால் கோட்டாபய என்ற ஜனாதிபதியே இல்லை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் தலைமையிலான குழு கைது செய்யப்பட்டிருந்தால், கோட்டாபய ராஜபக்ச என்ற ஜனாதிபதி உருவாகியிருக்க மாட்டார் என ஊடகவியலாளர் தாரிந்து ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
சஹ்ரான் தலைமையிலான குழு ஈஸ்டர் தாக்குதல்களுக்குத் தயாராகத் தொடங்கிய ஆரம்பக் கட்டங்களிலேயே, மிக உயர்ந்த மட்டத்திலுள்ள நபர்களுக்கு இது குறித்த தகவல்கள் கிடைத்திருந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள்
“ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த தகவல்கள் முன்னரே கிடைத்திருந்தன என்பதை நீதிமன்ற நடவடிக்கைகள் வெளிப்படுத்தி வருகின்றன.

இதில் தாக்குதல் தொடர்பான தகவல்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டன என்பதாலும், அதன் விளைவாகவே தாக்குதல் நடைபெற அனுமதிக்கப்பட்டது என்பதாலும் எழுந்த தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை இப்போது கிடைக்கும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
வவுனதீவு சம்பவத்திற்குப் பிறகு, அது சஹ்ரானின் குழுவால் நடத்தப்பட்டது என்பதைக் குறிக்கும் தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) தெரிவிக்கப்பட்டன.
அடுத்து என்ன நடந்தது? அந்தப் பிரிவின் பொறுப்பாளர் தனது மேலதிகாரிக்குத் தகவலைத் தெரிவித்தார். அவர் அந்தத் தகவலைத் தலைமையகத்திற்கு அனுப்பினார்.
இறுதியில், அந்த டிசம்பர் மாதத்தில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வு மீளாய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சூள கொடித்துவக்கு மற்றும் அவரது குழுவினர் கலந்துகொண்டனர்.
திசைதிருப்பும் ஒரு திட்டமிட்ட முயற்சி
தாக்குதல் சஹ்ரானின் குழுவால் நடத்தப்பட்டது என்று இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அங்கு தெரிவித்தனர். அவர்கள் அவ்வாறு கூறியிருந்தும், உண்மையில் என்ன நடந்தது?

தமிழர்கள் - குறிப்பாக விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புடன் தொடர்புடையவர்கள் தான் இச்செயலைச் செய்ததாகக் கூறி, சூள கொடித்துவக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கடிதங்களில் கையெழுத்திட்டு அனுப்பினார்.
இந்த விவகாரத்தை விடுதலைப் புலிகள் அமைப்பை நோக்கித் திசைதிருப்பும் ஒரு திட்டமிட்ட முயற்சி அங்கு இடம்பெற்றது. அதன் நோக்கம் என்ன? மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கூறியது போல, அக்காலகட்டத்திலேயே சஹ்ரான் கைது செய்யப்பட்டிருந்தால், ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்திருக்காது. ஈஸ்டர் தாக்குதல்கள் இல்லாவிட்டால், கோட்டாபய ஒரு ஜனாதிபதியே இருந்திருக்க மாட்டார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் இல்லாவிட்டால், ஒருவேளை ஷானி அபேசேகர போன்றவர்களால் அப்போதே விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கும்.
கோட்டாபயவும் அவரது சகாக்களும் இப்போது சிறையில் இருந்திருப்பார்கள்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |