அதிபர் நிதியத்தின் மருத்துவக் கொடுப்பனவுகள் 100 வீதமாக அதிகரிப்பு
அதிபர் நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2024ஆம் ஆண்டு முதல்அதிபரின் வழிகாட்டுதலுக்கு அமைய அதிபர் நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
''இதுவரை மருத்துவ உதவி வழங்கப்படாதவர்களுக்கு நோய்கள் கண்டறியப்பட்டு, அந்த நோய்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கராபிட்டிய வைத்தியசாலை
இந்த ஆண்டு முதல் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனியார் அல்லது அரை அரச வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவ உதவி வழங்கப்படும்.
நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெறுவதற்காக நகரத்திற்கு வருவதைக் குறைப்பதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் அதிபர் நிதியத்தில் இலகுவாகப் பதிவு செய்யும் முறையும் 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கராபிட்டிய வைத்தியசாலையில் வேலை நேரத்தின் பின்னர் இருதய சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு இந்த வருடம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதுடன் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இந்த முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் ராகம வைத்தியசாலையில் சிறு குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைகளுக்காக ஒரு மில்லியன் ரூபா வரையான மருத்துவ உதவி தொகையும் வழங்கப்படும்.
புற்றுநோய் அறுவை சிகிச்சை
மேலும், தனியார் அல்லது அரை அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு இதுவரை மருத்துவ உதவி வழங்கப்படாததோடு அதற்கான மருத்துவ உதவி இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
தனியார் அல்லது அரை அரச வைத்தியசாலைகள் தவிர, அரச வைத்தியசாலைகளும் இந்த ஆண்டு முதல் எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் வெளியில் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ உதவி வழங்கப்படும்.
மருத்துவ உதவிகளை வழங்குவதில் நோயாளர்களின் குடும்ப அலகு ஒன்றின் மாதாந்த வருமான வரம்பான 150,000 ரூபாவை இந்த வருடம் முதல் 02 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவ உதவி பெற வேண்டிய நடுத்தர மக்கள் அதிபர் நிதியில் இருந்து மருத்துவ உதவி பெற முடியும்.
இதேவேளை, 2023ஆம் ஆண்டிலும் மக்களுக்கான விரைவான மற்றும் விரிவான சேவைகளை வழங்குவதற்கு அதிபரின் பணிப்புரைக்கு அமைய அதிபர் நிதியம் செயற்பட்டது.
அதிபரின் பணிப்புரைக்கமை
2022 ஆகஸ்ட் முதல் பணம் செலுத்தாமல் குவிந்துள்ள 8,000இற்கும் மேற்பட்ட மருத்துவ உதவி விண்ணப்பங்கள் உட்பட, அந்த ஆண்டின் இறுதிக்குள், சுமார்12,000 மருத்துவ உதவி விண்ணப்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 1,342 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கு, 3458 மருத்துவ உதவி விண்ணப்பங்கள் பெறப்பட்டதோடு அந்த விண்ணப்பங்கள் அனைத்திற்கும் பணம் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதற்காக செலுத்தப்பட்ட தொகை 844.7 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.
அதேபோல் 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்றாலும் உயர்கல்வியை தொடர்பவதற்கான நிவாரணம் தேவைப்படும் மாணவர்களுக்காக கல்விப் பிரிவுவொன்றுக்கு 30 பேர் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 கல்விப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 5000 கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
அத்துடன் அதிபரின் பணிப்புரைக்கமைய அதிபர் நிதியத்தினால் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நிதியுதவி
இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 90 மாணவர்களுக்கு 31.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அறுவை சிகிச்சை/சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உத்தரவாதச் சான்றிதழ்கள் சில மணி நேரங்களுக்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ வசதிகளைப் பெற்று மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, மருத்துவமனைகளுக்கு அந்த நிதியத்தால் செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை மருத்துவக் கட்டணத்தில் இருந்து குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'' எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |