பிரான்ஸ் மாநாடு - அதிபர் ரணிலுக்கு விசேட அழைப்பு!
புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் பங்கேற்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாடு பிரான்ஸின் பெரிஸ் நகரில் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் 'தற்போதைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணல்' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
உலக சமூகத்தை பாதித்துள்ள பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இந்த மாநாட்டின் ஊடாக ஆராயப்பட உள்ளது.
மாநாடு

காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு முதல் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் வரை உலகளாவிய சமூகம் யுத்தங்கள் உட்பட பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
இந்த சவால்களை எதிர்கொள்ள புதிய நிதி ஒப்பந்தத்தின் அவசியத்தை உணர்ந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்கான சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த மாநாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்பிற்கு பிரான்ஸ் அதிபர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.