அனைவரும் இணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம்: ஜனாதிபதி சூளுரை!
வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) – கிளிநொச்சி (Kilinochchi) நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீர்
சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (02) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “யாழ் நதி திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன்
கலந்தாலோசிக்கிறோம்.
பொருளாதார நன்மைகள்
சீமெந்து நிறுவனம் இருந்த இடத்தில் முதலீட்டு வலயமொன்று ஆரம்பிக்கப்படும், பூநகரியிலும் அதனை செய்வோம். பலாலியில் சுற்றுலா துறையை மேம்படுத்துவோம்.
காற்று, சூரிய சக்தி மூலம் பெருமளவில் இங்கு மின் உற்பத்தி செய்ய முடியும். அதனால் மேலும் பல பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.
அடுத்த 5 -10 வருடங்களில் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும்.
நிர்மாண பணி
அதேநேரம் மத்திய அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளது.
மாகாண சபையினால் அதனை செய்ய முடியும். எனவே நாம் அடுத்தபடியாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ள ஆரம்பிப்போம். அதற்கான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
வங்குரோத்து நிலையிலும் இந்த திட்டத்தை நிறைவு செய்ய உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |