வெளிநாட்டு பயணத்துக்கு தடை! ரணில் அதிரடி உத்தரவு
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் முக்கிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென்ற காரணத்தால் ரணில் விக்ரமசிங்க குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தின் பின்னர், தேர்தலை முதன்மையாக கொண்ட அரசியல் பணிகளை தீவிரப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
மே தினக்கூட்டம்
அத்துடன், அதிபர் தேர்தலை நேரடி இலக்காக கொண்ட அரசியல் நடவடிக்கைகளை மே தினக்கூட்டத்துடன் ஆரம்பிக்க கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் தற்போது உள்ள தொழில்முறை குழுக்களுடன் ஐக்கிய தேசிய கட்சி பல சந்திப்புக்களை முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பல கட்சிகள் மற்றும் குழுக்களை இணைத்த பரந்த கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் களமிறங்க ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணங்கள்
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் பல அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடைபெறுமெனவும் இதில் அரசியல் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த தரப்பினருக்கு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளப்படுவதை தவிர்க்குமாறு ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |