ரணிலை ஆதரிக்கும் மொட்டு கட்சி : பிரசன்ன பகிரங்கம்
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன எந்த தீர்மானத்தை மேற்கொண்டாலும் தனது தனிப்பட்ட தீர்மானத்தை எந்த காரணத்துக்காகவும் மாற்றப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல்
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை பிரசன்ன ரணதுங்க நிராகரித்துள்ளார்.
இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நிச்சயம் நடைபெறுமெனவும் இதில் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க வேண்டியது நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரினதும் கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொட்டு கட்சி
அத்துடன், சிறிலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ளும் கட்சி எனவும், இதற்கமைய அதிபர் தேர்தல் தொடர்பிலும் உரிய நேரத்தில் சிறந்த தீர்மானத்தை தனது கட்சி மேற்கொள்ளும் எனவும் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், தனது கட்சி சார்பில் களமிறங்கும் அதிபர் வேட்பாளர் தொடர்பில் தேர்தல் நெருங்கும் போது அறிவிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |