மோசமான ஆட்சியை மூடி மறைக்க பாசாங்கு - ரொய்ஸ் பெர்னாந்து வெளிப்படை
கோட்டாபய மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ள மக்கள், அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சிலர், தாம் மக்கள் பக்கம் நிற்பதாக பாசாங்கு செய்வதாக நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ் பெர்னாந்து (Royce Fernando) விமர்சித்துள்ளார்.
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி விலக வேண்டுமென்றும் இல்லையேல் தாம் பதவி விலகி மக்களோடு இருக்க வேண்டிவரும் என்றும் பிரதி அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“மக்கள் இன்று பல்வேறு சுமைகளை சுமந்தவாறு அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் வேளையில், சில அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றனர். அச்சமோ வெட்கமோ இன்றி அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் தான் பதிலளிக்க வேண்டும். ஆயினும் மாநகர சபை உறுப்பினரான நான் இதற்கு பதில் அளிக்க வேண்டி இருக்கிறது.
அண்மையில் பிரதி அமைச்சர் ஒருவர் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி விலக வேண்டுமென்றும் இல்லையேல் தாங்கள் பதவி விலகி மக்களோடு இருக்க வேண்டிவரும் என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். மக்களோடு அவர்கள் எப்படி இருப்பார்கள். துர்நாற்றத்தை சுமந்தவாறு இருக்கும் அவர்கள் எவ்வாறு மக்களுடன் இருப்பார்கள். மக்கள் அவர்களுக்கு எதிராக கூக்குரலிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு பயந்துதான் அவர்கள் மக்களோடு இருப்பதாக கூறிக் கொள்கிறார்கள்.
ஆட்சிக்கு வரும் புதிய அரசாங்கத்தோடு சேர்ந்து இருப்பதற்காகவே அவர்கள் இவ்வாறு கூறிக்கொள்கிறார்கள். மோசமான ஆட்சி நிர்வாகத்தை மூடி மறைப்பதற்காக அவர்கள் நிறுவனங்கள் உடைய தலைவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
மக்கள் இப்போது ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். தேங்காய் உடைக்கிறார்கள். கூக்குரல் இடுகிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளுக்கு வீதியில் செல்ல முடியாது.
பசில் ராஜபக்ச நாட்டில் இருந்தால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டு இருக்காது என்று. ஆனால் அவர் நாட்டிற்கு வந்த பிறகு நிதியமைச்சர் பதவியை பெற்று இருக்கிறார். இப்போது என்ன நடந்திருக்கிறது மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது.
மக்களுக்கு இப்போது எல்லாம் புரிந்து இருக்கிறது. மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். வீட்டுக்கு கொண்டுவரப்படும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் நிலையில் மக்கள் அச்சத்தோடு இருக்கின்றார்கள்” என்றார்.