அமைச்சு பதவியிலிருந்து பிரதமர் உடன் விலக வேண்டும்! உதய கம்மன்பில
பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சு பதவியில் இருந்து உடன் விலக வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்துவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு எதிராக செயற்படுகிறது.
பாரதூரமான தவறு
ஆறாம் தர பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இணைக்கப்பட்டிருந்த வலைத்தளத்தின் முகவரி தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படும்.

வெளிநாடுகளில் புகையிரதம் விபத்துக்குள்ளானாலே போக்குவரத்து அமைச்சர் பதவி விலகுவார். ஆனால் இலங்கையில் அவ்வாறான பழக்கம் கிடையாது.
பாடசாலை புத்தகத்தில் இவ்வாறான பாரதூரமான தவறு இடம்பெற்றுள்ள நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்கவில்லை.
மாறாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியுள்ளார்.
பதவியில் விலக வேண்டும்
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் வெளிவந்ததன் பின்னர் அரச அதிகாரிகள் மீது பழி சுமத்துவதும், அவர்கள் பதவி விலக்குவதும் தற்போது புதிய பழக்கமாகி விட்டது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சராக பதவி வகிக்கும் வரையில் இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறுமா என்பது சந்தேகத்துக்கிடமானது.
ஆகவே பிரதமர் கல்வி அமைச்சு பதவியில் இருந்து உடன் விலக வேண்டும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |