நாட்டின் எதிர்காலத்துக்காக இதையெல்லாம் செய்கிறோம்! சபையில் பிரதமர் தெரிவித்த விடயம்
மக்களின் பாதுகாப்பிற்காக நாம் உரிய நேரத்தில் சகல தீர்மானங்களையும் மேற்கொண்டோம் என்பதனை நாம் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும் என சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கான ஆரம்ப அறிக்கையை வெளியிட்ட பிரதமர், புதிய அரசியலமைப்புக்கான வரைவு தற்போது வகுக்கப்படுவதாகவும் அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தனது உரையில்,
மக்களுக்கு வாக்குறுதி அளித்தால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஏறக்குறைய 25 வருடங்களாக தீர்க்கப்படாத ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டை இந்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்துக்காக இதையெல்லாம் செய்கிறோம். சவால்களுக்கு மத்தியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எமது முயற்சிகளுக்கு நீங்கள் அனைவரும் ஆதரவளிப்பீர்கள் என நம்புகின்றோம்.
தற்போதைய அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் மக்கள் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் உரிய நேரத்தில் எட்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அதற்கமைவாக குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்தார்.
எதிர்க்கட்சிகளின் முன்மொழிவுகள் மற்றும் விமர்சனங்களுக்கு நாங்கள் உன்னிப்பாகக் செவிமடுத்தோம். சில விமர்சனங்கள் நியாயமற்றவை. சில விமர்சனங்களில் ஏதேனும் நியாயம் இருப்பின், அவற்றை நாம் ஏற்று திருத்திக் கொள்ள எந்நேரத்திலும் தயாராக உள்ளோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
அரசியலமைப்பு பற்றிப் பேசினீர்கள். நாம் இப்போது வரைவைத் தயாரித்து வருகிறோம். அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்து விவாதிப்போம் என்பதை நினைவூட்டுகிறேன்.
எனவே, இந்த விவகாரத்தில் இரகசியமாக எதையும் செய்ய மாட்டோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.